இந்திய ஜனநாயகம் பெருமையுடன் வழங்கும்... தேர்தல் 2014

|சோனியா காந்தி|மன்மோகன் சிங்|அத்வானி|முலாயம் சிங் யாதவ்| பிரகாஷ் காரத்|மாயாவதி|ஜெயலலிதா|கருணாநிதி |மம்தா பானர்ஜி| லாலு |நிதிஷ் குமார்| மேலும் பல இந்திய அரசியல்வாதிகள் | நட்புக்காக : சமூக ஊடகத்தினர்..
இந்திய ஜனநாயகம் பெருமையுடன் வழங்கும்...
 தேர்தல் 2014
Published on

2014 மே மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நம் நாட்டில் இயங்கிவந்த இரண்டு முக்கியமான எதிரெதிர் கொள்கைகளின் இறுதிக்கட்ட போராக இருக்கும். அது இதுவரை இல்லாத வகையில் கடுமையான போராக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஒன்று நேருவின் சோசலிசம். இரண்டாவது ஆர்எஸ்எஸ்- சின் இந்துத்துவா சித்தாந்தம்.

கடந்த ஐம்பதாண்டுகளில் இந்த இரண்டு கொள்கைகளுமே காலத்துக்கேற்ப தங்களை சமரசம் செய்துகொண்டே வந்திருக்கின்றன. சோசலிசம் தேய்ந்து சந்தை முதலாளித்துவமாகி, உலகமயமாக்கலைச் சந்தித்தபோது 1992 -ல் பாபர் மசூதி இடிப்பு ஒரு திருப்புமுனையானது. இதைத் தொடர்ந்து இந்துத்துவ அரசியல் இயக்கங்கள் பரவலான வளர்ச்சியைப் பெற்றன. அந்தவளர்ச்சியை ஒட்டி சில அரசியல் சமரசங்களைச் செய்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி வாஜ்பாய் என்ற மனிதரின் மென்மையான இந்துத்துவ முகத்தை முன்னிறுத்தி தொண்ணூறுகளின் இறுதியில் ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு இப்போது. ஆனால் அது முன்னிறுத்தும் முகம் முன்பிருந்ததுபோல் தயக்கமான, மென்மையான முகம் அல்ல. இது பாஜகவே தவிர்த்திருக்க முடியாத முகம். அகில இந்திய அளவில் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜகவினர் கனவிலும் நினைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. பெரும்பாலும் உயர்சாதி, உயர் வர்க்கச் சிந்தனையாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் அக்கட்சியின் போக்கில் குஜராத்தின்  சாமானிய சாதியைச் சேர்ந்த, எண்ணைய் வியாபாரியின் மகன் முன்னிலைப் படுத்தப்பட்டிருப்பது ஒரு மிகப்பெரிய திருப்பம். இன்று படித்த நகர்ப்புறத்தினர், புதிய இளைஞர்கள் மத்தியில் மோடி மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம். இது சாதாரணமாக நடந்துவிடவில்லை.

90களின் நடுவில் குஜராத்தில் கேசுபாய் பட்டேல், சங்கர் சிங் வகேலா ஆகிய இரு  பாஜக அரசியல் தலைவர்களின் மோதலில் கேசுபாய் பட்டேலுக்கு ஆதரவாக  மோடி இருந்தார். இவர்  ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்து பாஜகவுக்கு பணிபுரிய அனுப்பப்பட்டு முக்கிய மாநிலத் தலைவராக உயர்ந்திருந்தவர். இந்த பஞ்சாயத்து முற்றியதில் மோடி டெல்லிக்கு பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவராக அனுப்பப்பட்டார். இது அவருக்குக் கொடுக் கப்பட்ட தண்டனை. ஆனால் இது ஒரு விதத்தில் அவருக்குக் கிடைத்த நல்வாய்ப்பு. அதற்கு முன் வரை அவர் ஒரு மாநிலத் தலைவர்தான்.  இப்போது நான்கைந்து மாநிலங்களின் பாஜகவின் பொறுப்பாளர். இந்த சமயத்தில் டெல்லியில் இருந்த தலைவர்களுக்கு நெருக்கமானார். 2001-ல் குஜராத் பாஜக முதல்வர் கேசுபாய் பட்டேலின் செயல்பாடுகளில் சுணக்கம் தெரிந்தபோது அடுத்த ஆண்டுவரும் சட்டமன்ற தேர்தல்களில் கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அதுவரை எந்தத் தேர்தல்களிலும் போட்டியிட்டிராத மோடி குஜராத் முதல்வராக டெல்லியிலிருந்து அனுப்பப் பட்டார்.

இது நடந்தது மோடியின் வார்த்தைகளில் சொல்வதானால் எதிர்பாராதது. அவரை திடீரென்று பிரதமர் வாஜ்பாயி கூப்பிட்டாராம். நேரில் போய் சந்தித்தபோது..“நீங்கள் ரொம்ப குண்டாயிட்டீங்க.. பஞ்சாபி சாப்பாடு அப்பிடி உங்களை ஆக்கி வெச்சிருக்கு.. நீங்க இளைக்கணும்.. டெல்லியை காலி பண்ணிட்டுப் போயிடுங்க” என்றாராம்.

“எங்க போகணும்?”

“கட்சி அதனால உங்களை குஜராத்துக்கு அனுப்பலாம்னு நினைக்குது. அங்கே போய் வேலை பாருங்க”

“வேறெந்த மாநிலமெல்லாம் என்னோட பொறுப்புல வருது?”

“நீங்க குஜராத்துல எலெக்ஷன்ல நிக்கபோறீங்க” என்று வாஜ்பாயி சொன்னபோதுதான்  மோடிக்கு நாம் குஜராத் முதல்வர் ஆகப்போகிறோம் என்பது உறைத்ததாம்.

குஜராத்தில் ஆரம்பத்தில் அவ்வளவு சுமுகமாக எதுவுமே இல்லை. சில மாதங்களிலேயே கோத்ரா கலவரம். அதன் கோர நிழல் இன்னும் விடாமல் மோடியைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதைத் தொடர்ந்து மூன்று தேர்தல்களை அம்மாநிலத்தில் ஜெயித்துவிட்டார். அந்த தொடர் வெற்றிதான் அவரை தேசிய அளவில் இன்னொரு இன்னிங்க்ஸ் விளையாட இழுத்து வந்திருக்கிறது.

காங்கிரசின் சசிதரூர்தான் ட்விட்டரில் அதிகமாக பின் தொடரப்படும் இந்திய அரசியல்வாதியாக இருந்தார் (அதற்கு அவர் கொடுத்த விலை அதிகம். மாட்டுவண்டி கிளாஸ் என்று எழுதி பெரிய சர்ச்சையில், சிக்கினார்). ஆனால் அவரையும் தாண்டிப்போய்விட்டார் மோடி!. இன்று அவருக்கு 26 லட்சம் பேர் ட்விட்டரில் பின் தொடர்கிறவர்களாக உள்ளனர்.

பேஸ்புக்கில் 52 லட்சம் பேர் அவரது பக்கத்தை லைக் செய்துள்ளனர். இவருடன் அமெரிக்காவில் கல்வி கற்றவரான ராகுல் காந்தியை ஒப்பிடுகையில் அவரது பேஸ்புக் பக்கத்தை எழுபதாயிரம் பேர்தான் லைக் செய்துள்ளனர். ட்விட்டரில் இவர் இல்லவே இல்லை. ராகுல்காந்தி தனிமையிலேயே இருக்கிறார் என்பதையே இவை பிரதிபலிக்கின்றன என்கிறார்கள்.

இந்தியாவில் 7.8 கோடிப்பேர் பேஸ்புக்கில் உள்ளார்களாம். இவர்கள் சுமார் 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடும் என்று சமீபத்தில் மும்பை நிறுவனம் ஒன்று கூறியிருக்கிறது.  சுமார் 10 சதவீத வாக்கு வங்கி உடையவர்களாம் இவர்கள். ஆகவே சமூக ஊடகங்களை கணக்கில் வைத்துப் பார்த்தால் முந்திக் கொண்டிருப்பவர் மோடி என்று கண்ணை மூடிக் கொண்டு அடித்துச்

சொல்லி விடலாம்! 2014 பாஜகவின் தேர்தல் பிரச்சார அறிக்கையில் என்னென்ன அம்சங்களைச் சேர்க்க வேண்டும் என்று தன் சமூக ஊடகப் பக்கங்களில் கேட்டு தகவல் சேகரித்துக் கொண்டு இருக்கிறார் இன்றைய குஜராத் முதல்வர்.

சமூக ஊடகங்களில் மோடியின் செல்வாக்கை வளர்க்க சுமார் 100 பேர் கொண்ட மிகப்பெரிய குழுவே வேலை செய்கிறது என்று சொல்கிறார்கள். இந்தியா வேர்ல்டு இணையத்தின் உரிமையாளர் ராஜேஷ் ஜெயின், ஒன் இந்தியா இணைய தளங்களின் உரிமையாளர் பி.ஜி. மகேஷ் ஆகிய இருவரும்தான் இதைக் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதும் ஊடகத் தகவல்.

ராகுல் காந்தியின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் ஒன்றுதான். அது அவரைப் பற்றி பொதுமக்களுக்கு நேரு குடும்ப வாரிசு என்பதைத்தவிர எதுவும் பெரிதாகத் தெரியாது. அவர் அமெரிக்காவில் படித்தது, லண்டனில் வேலை பார்த்தது, இன்னும் திருமணமாகாமல் இருப்பது போன்ற விஷயங்கள் பற்றி முழுவதும் தெரியாது.

2004 தேர்தலின் போதுதான் ராகுல்காந்தி முழு நேர அரசியலுக்கு வந்தார். சோனியா ரேபரேலியில் போட்டியிட, ராகுல் அமேதியில் நின்று வென்றார். காங்கிரஸ் மீண்டும் வரவே முடியாது என்று கருதப்பட்ட தேர்தல் அது. பாஜகவின் இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரம் எல்லா மூளைகளையும் மழுங்க அடித்திருந்த நேரம்.

சோனியாவின் திறன் வாய்ந்த கூட்டணி அரசியலால் காங்கிரஸ் ஆட்சியில் அமர முடிந்தது. அதிலிருந்து பத்தாண்டுகள் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்துவருகிறார். அவரது முதல் கவனம் காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் வலுப்படுத்துவதில் இருந்தது. தொலைநோக்குடன் செயல்படுவதாகச் சொல்லி கட்சிக் குள் இளைஞர் காங்கிரஸ்,  மாணவர் காங்கிரஸ் தேர்தல்களை நடத்தினார். திறமையான இளைஞர்கள் கொண்ட ஓர் அணியை உருவாக்கினார். இதிலெல்லாம் அவர் காட்டிய ஆர்வம் புதுமையாக இருந்தது. இண்டர்வியூக்கள் நடத்தி புதிய இளைஞர்களை அவர் தேர்வு செய்தது காங்கிரசுக்குள் ஒரே நேரத்தில் சலசலப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முன்பை விட அதிக இடங்களைப் பெற்றது. ராகுல் நிறுத்திய இளம் அரசியல்வாதிகள் நிறைய பேர் வென்றனர். பல மாநிலத் தேர்தல்களில் ராகுல்காந்தி தன் திட்டங்களைச் செயல்பபடுத்திப் பார்த்தார். உ.பி. பீகார், குஜராத்- மூன்று மாநிலங்களும் ராகுல் காந்திக்கு அக்னிப் பரீட்சைகளாக அமைந்தன. அவர் தோற்றிருந்தாலும் அங்கெல்லாம் நிறைய கற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

இந்த ஆண்டு ஜனவரில் ஜெய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் செயற்குழு ராகுல் காந்தியை கட்சியின் துணைத்தலைவராக அறிவித்தது. கட்சியில் சோனியாவுக்கு அடுத்த இடம் அதிகாரபூர்வமாக அவருக்கு அளிக்கப் பட்டது. அந்த கூட்டத்தில் பேசுகையில் ராகுல்,“எதுவுமே சரியில்லை. நமது நிர்வாகம், பொது அமைப்புகள், நீதித்துறை, கல்வி, அரசியல் எல்லாமே விவரம் தெரிந்தவர்களை வெளியிலேயே வைத்திருக்கும் விதத்தில் அமைந்துள்ளன” என்றார். சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் மீதான விமர்சனம்தான் இது. ஆனால் என்ன செய்துவிட முடியும் ராகுலால்? என்றால் எல்லா இடங்களிலும் மவுனமே பதிலாகக் கிடைக்கிறது.

டெல்லியில் இந்த ஏப்ரலில் சிஐஐ கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது பலரால் விமர்சிக்கப்பட்டது. சமூக ஊடங்களில் அவரைப் பின்னி எடுத்துவிட்டார்கள். இந்தியா யானை என்கிறார்கள். அது ஒரு தேன் கூடு என்று ஏதோ அவர் சொல்லப்போக பெரிய காமெடி ஆகிவிட்டது. பப்பு(இந்தியில் அசட்டுப் பையன்) என்று ராகுல் காந்தியை அழைத்து அவரது எதிர்ப்பாளர்கள் தூள் கிளப்பினால் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோடியை ஃபேக்கு(இந்தியில் வெட்டிபந்தா) என்ற பெயரில் அழைத்து விமர்சிக்கிறார்கள். இந்தத் தேர்தல் நெருங்க நெருங்க பப்பு வெர்சஸ் ஃபேக்கு மோதல் உச்ச கட்டத்தை அடையவிருக்கிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசியல் ரீதியாக ராகுல்காந்தி வெளிப்படையாக தன் அதிகாரத்தைக் காட்டியது ஒரே விஷயத்தில்தான். அது டெல்லி பிரஸ்கிளப்பில் அஜய்மாக்கன் நிருபர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் புகுந்து தண்டனை பெற்ற அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் அவசரச் சட்டத்தை நான்சென்ஸ் என்று திட்டியதுதான். அவசர அவசரமாக அந்த சட்டமும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. ஆனால் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் இதைப் பேசியிருக்க வேண்டியதில்லை; பல வாரங்களுக்கு முன்பே இந்த அவசரச் சட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டு இருந்தபோது ராகுல் எங்கே போனார் என்ற விமர்சனங்களும் அவர் மீது  வைக்கப்பட்டன. கடந்த இரண்டாண்டுகளாக வரலாறு கண்டிராத ஊழல் குற்றச்சாட்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி சிக்கித் தவிக்கிறது. காங்கிரஸ் தலைமைக்கும் இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்று காண்பிப்பதற்காகத்தான் இந்த நாடகம் திட்டமிட்டு செய்யப்பட்டது என்றும் சொல்லப் பட்டது.

காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தங்களை செய்வதற்காக சோனியா காந்தி மூன்று கமிட்டிகளை அமைத்தார். மூன்றுமே மாநிலத் தலைவர்களை தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யவேண்டும் என்று கூறின. ஆனால் அதைச் செய்ய தயங்குகிறார் அவர். வலுவான மாநிலத்தலைமையை காங்கிரஸ் மேலிடம் விரும்பவே இல்லை. ஆந்திராவிலும் அதுவே நடந்தது. தமிழ்நாட்டிலும் வாசன் அணியை ராகுல் விரும்பவே இல்லை. சோனியா, மாநிலக்  கட்சிகளுடனும் கம்யூனிஸ்ட்களுடனும் நல்லுறவைப் பேணி கூட்டணியை உருவாக்கியிருந்தார். ஆனால் பிற கட்சித் தலைவர்களுடனான நட்புறவை ராகுல்காந்தி எந்த அளவுக்குப் பேண முடியும் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் சந்திக்கவே இல்லை என்பதைக் கவனிக்கவும்.

கடந்த ஆறுமாத காலங்களில் எடுக்கப் பட்ட பல கருத்துக் கணிப்புகள் ராகுல் காந்தியை விட மோடியே பிரதமர் ரேசில் பல படிகள் முன்னேறி இருப்பதையே தொடர்ந்து காட்டி வருகிற யதார்த்ததையும் பார்க்கவேண்டும்.

டெல்லியில் நடந்த சிஐஐ கூட்டத்தில் ராகுல் பேசி முடிக்கையில்  ‘இந்தியாவில் மூன்று அங்கங்கள் உள்ளன. ஏழைகள் ஓர் அங்கம்; தொழில்துறை இன்னொரு அங்கம். நடுத்தர வர்க்கம் மூன்றாவது அங்கம். நாம் இந்த மூன்று அங்கங்களுடனும் பணிபுரிய வேண்டும்’ என்றார். தொழில்துறையினர் காங்கிரஸ் அரசையும் பார்த்துவிட்டார்கள்;  அதற்கு முந்தைய பாஜக அரசையும் பார்த்துவிட்டார்கள். சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் இரண்டுக்கும் ஒன்றுதான். ஆனால் பாஜக அரசைக் கொண்டுவர கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புவதாகவே தோற்றம் இருப்பது உண்மை.  நடுத்தவர வர்க்கம் எந்தப் பக்கம் அலை வீசுகிறதோ அந்தப் பக்கம் போகக்கூடிய ஒன்று. அந்த வர்க்கத்தை ஊழல்களும் விலைவாசி உயர்வும் பொருளாதார நெருக்கடியும் ஆளும் மத்திய அரசுக்கு எதிராகக் கொதிக்க வைத்துள்ளன. ஏழைகள் என்கிற வர்க்கம் உணவுப் பாதுகாப்பு மசோதா, ஏற்கெனவே செயல்பட்டுவரும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம் ஆகியவற்றால் பலன் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவார்களா?  இதுதான் மத்தியில் ஆளும் கட்சிக்கு உள்ள சவால்.

நவம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com